“சிராஜுல் மில்லத் – ஒரு சகாப்தம்” எழுதிய ஆய்வறிஞர் சேயன் இப்ராஹிம் அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள், தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் போற்றப்பட்டு, பின்பற்றப்பட்டு, வாழ்த்தப் பெற்ற தனிப்பெரும் தலைவர் ஆவார்கள்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நிழலாக வாழ்ந்து, அவரின் குரலாக ஒலித்து, அவரின் இதயமாக நாட்டுப் பணி செய்தவர் சிராஜுல் மில்லத் அவர்கள். சமுதாயம் இதை அறிந்திருக்கிறது!
பள்ளப்பட்டி மௌலானா உலமாக்களின் முதுபெரும் தலைவர் ஆர்.கே. பாகவி ஹழ்ரத் அவர்கள் வழங்கிய சிறப்பு அடைமொழி “சிராஜுல் மில்லத். காயிதே மில்லத்” அவர்கள் சமுதாயத்தை நேர்வழியில் நடத்திய வழிகாட்டி; அந்தச் சமுதாயத்தைக் கலங்கரை விளக்காக இருந்து வாழ்ந்து காட்டியவர் சிராஜுல் மில்லத். இன்றைய இந்தியத் திருநாட்டில் வாழும் முஸ்லிம் சமுதாயத்திற்குக் காட்டிய வழியாகவும், ஊட்டிய நெறியாகவும் அவரின் பொன்மொழி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
“வன்முறைக்குப் பணியவும் கூடாது! வன்முறைக்குத் துணியவும் கூடாது!” இது இந்திய முஸ்லிம்களின் இதயத்தில் பதிய வைக்க வேண்டிய பொன்மொழி!
“இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி!” இது தங்கத் தமிழகத்தில் உள்ள அனைவரின் இதயத்திலும் பொறித்து வைக்க வேண்டிய பொன்மொழி!
தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சுருக்கமாகவும், அதே சமயத்தில் அவர்து வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள வரலாறு படைத்த நிகழ்வுகளையும் பொறுக்கி எடுத்து, அழகாகத் தொகுத்து, இந்த அருமையான வரலாற்று பதிவு படைக்கப்பட்டிருக்கிறது. சேயன் அவர்கள் வரலாற்றுச் சம்பவங்களை மேயக் கூடியவர் மட்டுமல்லர்; வரலாற்றின் ஆழத்தையும் அதன் நுட்பத்தையும் நுணுக்கத்தையும் வெளிக் கொணரும் அரிய சிறப்பம்சமும் பெற்றிருப்பவர் ஆவார்.
மிகச் சிரமப்பட்டு, தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் பற்றிய இந்த வரலாற்றுத் தொகுப்பை நமக்களித்திருக்கிறார். கேரளாவில் முஸ்லிம் லீக் பற்றியும் முஸ்லிம் லீக் தலைவர்கள் பற்றியும் நிரம்ப படைப்புகள் மலையாள மொழியில் குவிந்திருக்கின்றன. தமிழில் அவை போன்ற படைப்புகள் வெளிவர வேண்டும் என்று ஆசித்தோம்; அதை நிறைவேற்றும் விதத்தில் சகோதரர் சேயன் இப்ராஹிம் இந்த அருமையான நூலைத் தந்திருக்கிறார்.
இந்திய யூனியன் லீகின் 75வது ஆண்டு பவள விழா மாநாட்டில், தேசம் முழுவதிலும் இருந்து கூடும் திரளில், இந்த அழகிய நூல் வெளியிடப்பட்டுள்ளது என்று அறிய மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.