Skip to content

நபிகள் நாயகக் காவியம்

600.00

பன்னூல் படைத்த ஆசிரியர் மதிப்பிற்குரிய எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் இப்போது ஒரு நன்னூல் அளித்திருக்கிறார்.

‘நபிகள் நாயகக் காவியம்’

இந்நூல் உலகக் கிழிசல்களையெல்லாம் தைத்த பொன்னூலாம் புனித நபி முஹம்மத் (ஸல்) அவர்களைக் காவிய நாயகராக உடையது.

இது ‘நபிகள் நாயகக் காவியம்! அதனால் நாயகக் காவியம்.

உலக மனிதர்களிலேயே உயர்ந்தவர் உத்தம நபி. எனவே அவரைப் பாடும் நூலும் உயர்ந்த நூலாகி விடுகிறது.

நபிகள் நாயகம் பற்றி தமிழில் பல காவியங்கள் தோன்றியிருக்கின்றன. அவற்றுள் சீறா உட்பட எதுவும் முழுமையானதல்ல.

அந்த வகையில் பார்த்தாலும் இந்நூல் நபிகள் நாயகக் காவியங்களுள் நாயகக் காவியம். ஏனெனில் இது முழுமையானது; நிறைவானது.

பன்னூல் ஆசிரியரின் எழுதுகோலிலருந்து உதித்த நூல்கள் 125. அவற்றுள்ளும் இது ‘நாயகக்’ காவியமாகத் திகழ்கிறது.

பன்னூல் ஆசிரியரின் ஊர் தொண்டி. அவரும் அவர் ஊர் போலவே பல அரிய ‘பொருள்’களை இறக்குமதி செய்த துறைமுகமாகவே இருந்திருக்கிறார்.

அவருடைய முதல் நூல் ‘அரேபியாவின் அதிபதி’.இறுதி நூலும் அரேபியாவில் தோன்றி உலகத்தின் அதிபதியானவர் பற்றியது.

உலகத்தில் பெரியது லண்டன் நூலகம். அந்த நூலகத்தின், புத்தகங்களில் அதிகமானவற்றைப் படித்தவர் கார்ல் மார்க்ஸ்.

தமிழ்நாட்டு நூலகங்களுள் பெரியது கன்னிமாரா நூலகம். அதில் அதிகமான நூல்களைப் படித்தவர் எம்.ஆர்.எம்.

எம்.ஆர்.எம்மும் கார்ல் மார்க்ஸ் போலவே நூலகம் திறக்கும்போது உள்ளே நுழைந்து காவலர் ‘நூலகத்தை மூடப்போகிறோம். எழுந்து செல்லுங்கள்’ என்று கூறும்வரை படித்துக் கொண்டிருப்பார். நூலகத்திற்குள் நுழையும்போது கையில் புதிதாக ஒரு கொயர் குறிப்பேடு ஒன்று கொண்டு போவாராம். மாலை வீடு திரும்பும்போது அக்குறிப்பேடு நிறைந்திருக்குமாம்.

சென்னைப் பல்கலைக்கழக நூலகமும் அவர் அறிவுத் தாகம் தணிக்கும் சுணையாக இருந்திருக்கிறது.

இப்படிச் சேகரித்த விதைகளிலிருந்துதான் நுற்றுக்கணக்கான நூல்கள் முளைத்தன.

தமிழில் சுயமுன்னேற்ற நூல்களை முதலில் எழுதியவர் அவர். அவர் எழுதிய நூல்களைப் ‘பார்த்தே’ பின்னால் பலரும் சுயமுன்னேற்ற நூல்களை எழுதினர். இருந்தாலும் அவருடைய நூல்களின் தரத்தை பின்னால் வந்தவர்களால் எட்ட முடியவில்லை.

முன்னால் வந்தவர் முன்னாலேயே நிற்கிறார். பின்னால் வந்தவர்கள் பின்னாலேயே நிற்கிறார்கள்.

அவருடைய ‘வாழ்க்கையில் வெற்றி’யைப் படித்தே பலர் வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். அவருடைய எழுதுகோலே பலருடைய விதியை எழுதியது.

எழுத்தே வாழ்க்கை என வாழ்ந்த எம்.ஆர்.எம் அவர்கள் தமிழில் பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

அவர் தொகுத்தளித்த ‘இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணி. அவரே ஒரு பல்கலைக்கழகமாக இருந்ததால் ஒற்றை மனிதராக இருந்தே இந்த ஒப்பற்ற அறிவுக் கடலை உண்டாக்கித் தந்திருக்கிறார்.

‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’, ‘அல்ஹதீஸ்’, ‘நபிமார்கள் வரலாறு’, ‘வலிமார்கள் வரலாறு’ இவையெல்லாம் அவர் நமக்கு உயில் எழுதி வைத்திருக்கும் அரிய பொக்கிஷங்கள்.

நமக்காகக் காலமெல்லாம் உழைத்த அவருடைய எழுது கோலின் வியர்வைக்கு நாம் எப்படி கைம்மாறு செய்யப் போகிறோம்?

இதோ மற்றுமொரு சாதனை, அவருடைய புகழ் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம். ‘நபிகள் நாயகக் காவியம்’.

முஹம்மது நபியைப் பற்றி மூன்று நூல்கள் படைத்தவர் எம்.ஆர்.எம். அப்துற-றஹீம். அவருடைய ‘நபிகள் நாயக’த்தைப் படித்தே பல சகோதரச் சமயத்தவர் இஸ்லாத்தை அறிந்தனர்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய “ஆராயஅஅயன வாந Pசழிhநவ” என்ற நூல், வள்ளல் நபியின் வாழ்க்கையை விவரிக்கும் அரபி, உர்து, ஆங்கில நூல்களிலிருந்து அரும்பாடுபட்டுத் திரட்டிய தேன்கூடு.

மூன்றாவதாக அவர் படைத்ததே ‘நபிகள் நாயகக் காவியம்;’.

அரபுத் தூதர் பற்றிய மரபுக் கவிதைக் காவியம் இது.

மரபுக் கவிதைகள் அரபுக் குதிரைகள் போலப் பாய்கின்றன.

பாலைவனத் தூதரைப் பற்றிய காவியம் எனினும் எங்கும் பாலைவன வறட்சி இல்லை. காவியம் முழுமையுமே சோலை வனமாகச் சுகம் தருகிறது.

ஒவ்வொரு பாடலும் அராபியப் பேரீத்தம் பழங்களைப் போல் இனிக்கின்றன. சில பாடல்கள் ஒட்டகங்களைப் போல் கனம் மிகுந்த ‘பொருள்’களைச் சுமந்திருக்கின்றன.

சில பாடல்கள் அடியில் எண்ணெய்ச் செல்வத்தை மறைத்து வைத்திருக்கும் மணல் வெளியைப் போல் ஆழ்ந்த பொருளை மறைத்து வைத்திருக்கின்றன.

‘இறுதித் தூதரைப் பற்றி எழுதிய இந்தக் கை எதைப் பற்றியும் எழுதாது’ என்ற எம்.ஆர்.எம். அவர்கள் சபதம் செய்திருந்தார்.

அவர் சபதம் செய்தது போலவே அவர் இந்நூலை எழுதி முடித்ததும் அவர் கை செயலிழந்து போனது.

இது அண்ணல் நபி மீது அவர் கொண்டிருந்த அளவிலாக் காதலைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல இது அவருடைய எழுதுகோலின் கற்பையும் காட்டுகிறது.

ஆம். அவருடைய எழுதுகோல் பெருமானாரை நாயகனாகப் பெற்றபின் வேறு யாரையும் நாயகனாக்க விரும்பவில்லை.

“இறந்திடும் முன்னரே

இறந்திடாப் பெருவரம்

இறையிடம் இரந்துயான்

யாத்தன் இந் நூலையே”

என்கிறார் பாயிரத்தில் எம்.ஆர்.எம் அவருக்கு அந்த ‘இறந்திடாப் பெருவரம்’ கிடைத்துவிட்டது.

தமிழிருக்கும் வரை இந்நூலிருக்கும். இந்நூலிருக்கும் வரை எம்.ஆர்.எம். இருப்பார் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது அணிந்துரையில் இந்நூலைப் பற்றி கூறுகிறார்கள்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “நபிகள் நாயகக் காவியம்”

Your email address will not be published. Required fields are marked *