இந்நூலில் காணப் பெறுவதில் பெரும்பாலானவை அனுபவ உண்மைகள். நானே கண்ணுற்றும்¸ செவியுற்றும் அனுபவித்தும் அறிந்தவை ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற பெருநோக்குடன் அவற்றைத் தமிழறிந்த மக்கள் முன் புத்தகம் என்ற தட்டத்தின் மீது வைத்துக் கொணர்ந்துள்ளேன். அவற்றில் சில கொட்டையில்லா முந்திரிப்பழம் போன்று தூக்கித் தூக்கி விழுங்க ஏதுவாகவும்¸ சில கதலி போன்று உரித்து அருந்த வேண்டியனவாகவும்¸ சில பலா போன்று அறுத்துச் சுளை எடுத்துக் கொட்டை நீக்கி உண்ண வேண்டியனவாகவும் அமைந்துள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட தேங்காய் போன்று நார் உரித்துத் தோல்நீக்கி¸ தோடுடைத்துப் பருப்புத் துருவிப்பால் பிழிந்து அருந்தக்கூடிய அவ்வளவு சிரமம் தரக்கூடியதாக இல்லை என்பது என் துணிவு. மகனே! கேள்! என்ற இந்நூலைப் படித்தால் இதனை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
Reviews
There are no reviews yet.